சென்னை: ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “பம்பரச் சின்னம் பொது சின்னம் இல்லை. வேறு எந்தக் கட்சியும் அந்தச் சின்னத்தை கேட்கவில்லை. எங்கள் மனுவைப் பரிசீலித்து, பம்பரச் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்,” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை விசாரித்தனர்.
வைகோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் முன்னிலையாகி மக்களவைத் தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.
இதையடுத்து, ம.தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

