தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியர்

1 mins read
d917119a-6bba-48a8-94a0-3dbcb97bdf6d
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ் நாடு செயலகக் கட்டடத்தில் காவல்துறையினர் மோப்ப நாயுடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். - படம்: ஊடகம்

சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. அதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

தலைமைச் செயலகக் கட்டடம் முழுவதும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் அதிகாரிகள் பரபரப்புடன் சோதனைப் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதையடுத்து இது புரளி என்ற முடிவுக்கு வந்தனர்.

மிரட்டல் விடுத்தவரின் தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில், மிரட்டல் விடுத்தவர் கடலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  

இதேபோல் பிப்ரவரி 2ஆம் தேதி பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன் காரணமாக மாணவர்கள் பள்ளிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்