ஸ்டெர்லைட் ஆலை மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

ஸ்டெர்லைட் ஆலை மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

2 mins read
500a22ff-ff03-49c5-b4bb-72e6efd6e363
ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றவில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக, உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறு உள்ளதாக ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக பரவலாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அந்த ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை எதிர்த்து ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதை விசாரித்த உயர் நீதி மன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அந்த ஆலையின் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து வந்தது.

அப்போது ஸ்டெர்லைட் ஆலை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாதிட்டனர். மேலும் பல்வேறு ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தங்களால் தலையிட முடியாது என்றும் அந்நீதிமன்றம் இந்த விவகாரத்தை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டினர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகள் கவலைக்குரியவை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் உச்ச நீதிமன்றம் பல்வேறு வாய்ப்புகளை அளித்தும்கூட கழிவுகளை அகற்ற ஆலை நிர்வாகம் தவறிவிட்டதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஆலையைச் சுற்றியுள்ள மக்களின் சுற்றுச்சூழலும் சுகாதாரமும் மிக முக்கியமானவை எனத் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்பு மிக்கது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்துள்ள வெற்றி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்