ராமநாதபுரம்: சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ஊழியர் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்ற சிங்கப்பூர் நிறுவன உரிமையாளருக்கும் அதிகாரிகளுக்கும் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன். கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள இ.ஐ. கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகளுக்கு முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவன உரிமையாளர் கொலின் நியாங், வணிக மேலாளர் டிம்சன், திட்ட மேலாளர் கோஹன் மிங் ஆகியோர் பங்கேற்றனர்.
திருமண விழாவிற்கு வந்தபோது அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றி வேட்டி அணிந்திருந்தனர்.
இவர்களின் வருகையால் அகமகிழ்ந்து போன செந்தூர் பாண்டியனும் அவரது குடும்பத்தாரும் சிறப்பான வரவேற்பை அளித்தனர். முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருமண மண்டபம் வரை விருந்தினர்களைக் குதிரை வண்டியில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
குதிரை வண்டிக்கு முன்பு செண்டை மேளம், சீர்வரிசைகள், தாம்பூலத்தட்டுகளுடன் சிலர் ஊர்வலமாகச் சென்றனர். திருமணத்தை நடத்தி முடித்த பின்னர் மணமகள் தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றி வரும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு பள்ளி வளர்ச்சிக்காக அவர்கள் தலைமை ஆசிரியரிடம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர்.