சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பரபரப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, தொகுதிப் பங்கீடு தொடர்பில் கட்சிகளுக்கு இடையே இன்னும் ஒருமித்த தீர்வு எட்டப்படவில்லை என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
திமுக தலைமையிலான கூட்டணியில் இந்த முறையும் நிறைய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அக்கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க இயலாமல் திமுக தலைமை நெருக்கடியில் உள்ளது.
தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இலக்கங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
“திமுக, காங்கிரஸ் உறவு எப்போதும்போல் வலுவாக உள்ளது. அதற்காக தொகுதிப் பங்கீட்டில் எங்களால் இலக்கங்களை விட்டுக்கொடுக்க இயலாது. திமுக தலைமையும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கும். இது குறித்து பேசித் தீர்வு காண்போம்,” என்றார் செல்வப்பெருந்தகை.
இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள், இம்முறை ஒரு தொகுதியாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகள் கேட்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக, தேமுதிக இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
தொகுதிப்பங்கீடு தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை, அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என்றார்.
எதிர்வரும் தேர்தலில் தேமுதிகவுக்கு அதிகபட்சமாக ஐந்து மக்களவைத் தொகுதிகளை மட்டுமே ஒதுக்க இயலும். தேர்தல் முடிந்த பின்னர் மாநிலங்களவை இடம் குறித்து பேசலாம் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.