வைகோ: தமிழகத்திற்கு ஆபத்தான அதிவேக அணு உலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்

வைகோ: தமிழகத்திற்கு ஆபத்தான அதிவேக அணு உலைத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்

2 mins read
7fd9752b-99aa-423b-a3ff-cacb644abea9
கல்பாக்கத்தில் மத்திய அரசு அமைக்கவுள்ள அணு உலை தமிழ் நாட்டுக்கே பெரும் ஆபத்தைக் கொண்டு வரும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகக் கொண்ட புதிய வகை அதிவேக அணுஉலையை சென்னை கல்பாக்கத்தில் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு அங்கு அணுஉலை அமைந்தால் மக்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்குவர். எனவே, அந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் இருந்து அணுஉலைகளுக்கும் அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் மத்திய பாஜக அரசு, தமிழகத்தில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.

“இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளே இந்தப் புதிய அணு உலைகளைக் கைவிட்டு விட்டன. அவ்வாறிருக்க, மத்திய அரசு சென்னையில் இந்த அணுஉலையை நிறுவ பாடுபட்டு வருகிறது. அவ்வாறு அந்த உலை அமைந்தால் சென்னைக்கும் வட தமிழகத்துக்கும் பெருமளவு பாதிப்பு ஏற்படும். எனவே இத்திட்டத்தை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும்,” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

2004ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகளுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2010ஆம் ஆண்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இதன் தொழில்நுட்பமானது உலக நாடுகள் பலவும் பயன்படுத்தி கைகூடாத காரணத்தால் கைவிடப்பட்டது.

இதன் காரணமாக இத்திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், இப்போது 2024 டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

பன்னாட்டு அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகள் எதுவும் இந்த அதிவேக அணு உலைகளுக்குக் கிடையாது என்பதால், இந்த உலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகமும் எழுகிறது.

கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே விட்டு வைக்க மாட்டோம் என மத்திய அரசு தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், தற்போது அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளை மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

“தமிழக அரசு முனைந்து மத்திய அரசின் இந்தத் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்,” என்று திரு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்