‘சூரிய வீடு; இலவச மின்சாரம்’ திட்டத்தின்கீழ் 25 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க இலக்கு

2 mins read
7535b5d1-ad39-4735-bb94-827cc2685ec0
மின் உற்பத்திக்கான செலவு 30 முதல் 40 விழுக்காடு அளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஊடகம்

சென்னை: நாடு முழுவதும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில் பிரதமரின் ‘சூரிய வீடு; இலவச மின்சாரம்’ திட்டத்தை தமிழகத்தில் முழுவீச்சில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த இலக்கு எட்டப்படும்போது மின் உற்பத்திக்கான செலவு 30 முதல் 40 விழுக்காடு அளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் வீடுகளுக்கு இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை தமிழக மின்வாரியம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 2.40 கோடி வீடுகளுக்கு மின் வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது.

இதற்காக தனிப்பட்ட மின்உற்பத்தி நடவடிக்கைகளைத் தவிர தனியாரிடம் இருந்தும் மின்சாரம் வாங்கப்படுகிறது. எனினும் உற்பத்தி செலவுகள் குறையவில்லை.

இந்நிலையில் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் மின் உற்பத்திக்கான செலவு குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தில் சொந்தப் பயன்பாட்டிற்குப் போக எஞ்சியுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்பனை செய்ய இயலும். இதன்மூலம் மின் உற்பத்திக்கான செலவுகள் வெகுவாகக் குறையும்.

“வீடுகளில் மானியத்துடன் கூடிய மேற்கூரை சூரியசக்தி மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தில், 1 கிலோவாட் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க ரூ.50 ஆயிரம், 2 கிலோவாட் அமைக்க ரூ.1 லட்சம், 3 கிலோவாட் அமைக்க ரூ.1.50 லட்சம் வரை செலவாகும். அதற்கு முறையே, ரூ.30 ஆயிரம், ரூ.60 ஆயிரம், ரூ.78 ஆயிரம் மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. சூரியசக்தி மின்நிலையம் அமைக்கும் பணி முடிந்த 30 நாட்களுக்குள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இத்தொகை செலுத்தப்படும்,” என இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தமிழகத்தில் தற்போது மின்வாரியம் சார்பில் அனல், நீர், எரிவாயு மூலம் 7,157 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு ரூ.1.11 லட்சம் கோடி செலவாகிறது. இந்த சூழலில், சூரியசக்தி மேற்கூரை மின்நிலையம் அமைப்பதன் மூலம் மின்வாரியத்துக்கு 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு செலவு குறையும்.

குறிப்புச் சொற்கள்