சென்னை: காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அவரது நினைவிடத்திற்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
விஜயகாந்த் காலமாகி இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
அவர்களுக்கு தலைவாழை இலை போட்டு, காலையில் இட்லி, வடை, பொங்கல் என உணவு வழங்கப்படுகிறது. மதியம் சைவ, அசைவ உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.
“அனைவருக்கும் நாற்காலி, மேசை போடப்பட்டு சமபந்தி விருந்து அளிக்கப்படுகிறது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தம் கைப்பட உணவு பரிமாறுகிறார்.
“கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு வரும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது அவர் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பை கண்கூடாகப் பார்க்க முடிகிறது,” என தேமுதிக நிர்வாகிகள் கூறினர்.