சென்னை: தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் பயனாளர்களை உரிய வகையில் சென்றடைந்தனவா என்பதை உறுதிசெய்ய, ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இனி, அரசு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் பொது மக்களை நேரடியாகத் தொடர்புகொண்டு, கருத்துகளைக் கேட்டறிவார்கள் என முதல்வர் கூறியுள்ளார்.
மேலும், நலத்திட்டப் பயனாளர்களைத் தாமே தொடர்புகொண்டு பேசப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மார்ச் 6ஆம் தேதி இப்புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் அரசு திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும் என்றும் முதல்வர் கூறினார்.
“முதற்கட்டமாக நலத் திட்டங்கள் பற்றியும், அடுத்த கட்டமாக அரசுத் துறைகளில் வழங்கப்படுகிற சேவைகள் பற்றியும் கருத்துகள் பெற்று அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
“இப்படி ஒவ்வொரு நாளும் மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கி வருகிறோம். நிதி நெருக்கடி அதிகமாக இருக்கிற சூழ்நிலையிலும் மக்கள் நலத் திட்டங்களை அரசு நிறுத்தவில்லை,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முன்னதாக, புதிதாகக் கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டங்களுக்கான உட்கட்டமைப்புகள் திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதால் அடிக்கடி பிரதமர் மோடி தமிழகம் வரத் தொடங்கி இருக்கிறார். தமிழகத்துக்கு நன்மை செய்துவிட்டு, நாம் வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு பிரதமர் வர வேண்டும்.
“அப்படி இல்லாமல், தமிழக மக்களின் வரிப்பணமும், வாக்கு மட்டும் போதும் என்று நினைத்து, பதவியைக் காப்பாற்றிக்கொள்ள ஆதரவு கேட்டு தமிழகத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி,” என்று முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

