சிவகங்கை: பாஜக கூட்டணியில் சேர்வதற்கு அமமுகவில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கட்சி தீவிரமாக தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் குக்கர் சின்னத்துடன் கூடிய பதாகைகளுடன் அமமுக தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் பாஜக கூட்டணியில் அமமுக சேர வாய்ப்புள்ளதால், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சிவகங்கை தொகுதியில் கடந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட தேர்போகி பாண்டி 1,22,534 வாக்குகள் பெற்றார். இது 11.3 விழுக்காடு. இதனால் பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென அமமுக கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக அந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவகங்கை தொகுதி தேவகோட்டை பகுதியில் குக்கர் சின்னத்துடன் பதாகைகளை நிறுத்தி அமமுகவினர் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி உள்ளனர்.
கடந்த முறை போட்டியிட்ட மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி நிறுத்தப்படலாம் என்றும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.