சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிற்கு வருகையளித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பழம்பெரும் நடிகையான வைஜெயந்திமாலாவை திங்கட்கிழமை சென்னையில் சந்தித்தார்.
இது தொடர்பான படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்தார். அதில் 90 வயது வைஜெயந்திமாலா பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்துக் கௌரவித்தார்.
பிரதமர் மோடி, தமது கூப்பிய கைகளுடன் அதை ஏற்றுக்கொண்டார். மற்றொரு படத்தில், வெள்ளை, தங்க நிற புடவை அணிந்துள்ள வைஜெயந்திமலா, பிரதமர் மோடியுடன் உரையாடுவதைக் காண முடிந்தது.
“வைஜெயந்திமாலா ஜியை சென்னையில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார். இந்திய திரையுலகிற்கு அவரது பங்களிப்பு நாடு முழுக்க போற்றப்படும்,” என பிரதமர் மோடி தமது பதிவில் புகழாரம் சூட்டினார்.
வைஜெயந்திமாலா பழம்பெரும் நடிகை மட்டுமில்லை. அவர் தேர்ந்த பாரம்பரிய நடனக் கலைஞரும் கூட. கடந்த சில நாள்களுக்கு முன்பு வைஜெயந்திமாலா ராக் சேவாவில் நடனமாடி இருந்தார்.
மேடையில் அட்டகாசமாக அவர் ஆடிய பரதநாட்டியம் பலரையும் வியக்க வைத்தது. வயது என்பது எதற்கும் எப்போதுமே தடையாக இருந்தது இல்லை என்பதை அது காட்டியது. அவரது படைப்பை இணையவாசிகள் பலரும் பாராட்டினர்.