திமுக வேட்பாளராக களமிறங்க நடிகர் வடிவேலு சம்மதம்

2 mins read
5f8043df-3834-4b2a-965b-483d440c1164
நகைச்சுவை நடிகர் வடிவேலு. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்குத் திமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வடிவேலுடன் ஆலோசிக்கப்பட்டதால் அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவின் திரைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்துபோனது. இதற்கு திமுகவுக்கு ஆதரவாக கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் பிரசாரம் செய்ததுதான் காரணம் எனக் கூறப்பட்டது.

அப்போது நடிப்புலகில் மிகவும் பிரபலமாக இருந்த வடிவேலுவை தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திமுக அழைத்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுக மேடைகளில் பலத்த பிரசாரம் மேற்கொண்டார். அதிலும் குறிப்பாக விஜயகாந்த்துக்கு எதிராகத் தீவிர பிரசாரம் செய்தார்.

ஆனால், அந்தத் தேர்தலில் திமுக வெற்றிபெறவில்லை. ஜெயலலிதா முதல்வரானார். இதையடுத்து, அவருக்குப் பயந்து திரையுலகில் யாரும் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் பட வாய்ப்புகள் இல்லாமல் ஒதுக்கப்பட்ட வடிவேலு, அரசியலிலும் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் அரசியல் குறித்தும், கருணாநிதி குறித்தும் அதிகம் பேசத் தொடங்கியுள்ளார். ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதியுடன் இணைந்து நடித்த பிறகு திமுகவுடன் அவரது நெருக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி சமாதிக்கு நேற்று சென்று சுற்றிப் பார்த்த அவர், இது சமாதி அல்ல, சன்னதி என்று பரவசப்பட்டார்.

தான் ஒரு எம்.ஜி.ஆர். ரசிகன் என்றும் ஆனால், கலைஞரின் தீவிர அபிமானி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடிவேலுவை திமுக சார்பில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கலாமா என்பது குறித்து அக்கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வடிவேலுவும் சம்மதம் தெரிவித்துள்ளதால் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அவர் திமுக சார்பில் போட்டியிடப் போவதாக தமிழக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்