வைகோ: ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்

வைகோ: ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்

2 mins read
b4a19ad6-d60b-4ccc-878d-3017def2a30f
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: இந்துத்துவக் கோட்பாட்டுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில், ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192வது பிறந்த நாள் விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு’ என்ற புத்தகத்தை ஆளுநர் ரவி வெளியிட்டுப் பேசும்போது,“அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தைக் காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார் என்று கூறியிருந்தார்.

மேலும், “கால்டுவெல் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காதவர். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது,” என்றும் கூறியிருந்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதிமுக செயலாளர் வைகோ, “வழக்கிழந்துபோன வடமொழியை புறந்தள்ளிய ராபர்ட் கால்டுவெல் குறித்து தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தன் பங்கிற்கு பேசியிருக்கிறார்.

“தமிழக வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் ராபர்ட் கால்டுவெலின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூலாகும்.

அந்த நூலையும், அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ் பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே ஆகும்.

தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும், உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர்.

இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித் துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் ஆய்வு நூல் ஆகும்.

அதேபோல், சாதி சமய வேறுபாடுகள் இன்றி அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்திய அய்யா வைகுண்டரை சனாதனத்தின் காவலர் என்று ஆளுநர் பேசி இருக்கிறார். இந்துத்துவக் கோட்பாட்டுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரசாரகர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவது கடுமையான கண்டனத்துக்குரியது என்று வைகோ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்