சென்னை: சென்னையில் தி.மு.க. சார்பில் மனிதநேய விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் நடிகர் சத்யராஜ்.
அப்போது அவர், தமிழகத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். எல்லா மதத்தவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர். அப்படியிருக்க மதச்சார்புக் கட்சிகளுக்கு இங்கு வரவேற்பில்லை.வடக்கில் இருந்து வரும் மதப்புயலை அவர்கள் தமிழகத்திற்குள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் நீட் தேர்வு பற்றி குறிப்பிடும்போது, “நீட் தேர்வுக்கு முன்பே அந்தக் காலத்தில் அவர்கள் ஒரு திட்டத்தை வைத்திருந்தனர். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். மருத்துவக் கல்லூரிக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
“நம் பிள்ளைகள் மருத்துவம் படிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அப்படி ஒரு திட்டத்தை தொடங்கியவர்கள், இப்போது அதே திட்டத்தை ‘நீட்’ என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றனர்.
தந்தை பெரியாரின் தொண்டர் அறிஞர் அண்ணா. அண்ணாவின் தொண்டர் கலைஞரும், எம்.ஜி.ஆரும். அவர்களைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெரியார் வழி வந்தவர்.
நமக்குள் நடப்பது பங்காளிச் சண்டை, இந்தச் சண்டையில் பகையாளியை உள்ளே விட்டுவிடக் கூடாது. இன்றைய காலத்தில் பெண்கள் சரிசமமாக உட்கார்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு கொள்கையும் சித்தாந்தமும் பெண்களிடம் ஆழமாக பதிய வேண்டும்.
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் இந்த ஆட்சி தொடர்ந்து நன்மைகளை செய்துகொண்டுதான் இருக்கும். வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை அழைத்துக்கொண்டு செல்லும்.
“அறநிலையத்துறைக்கு அமைச்சர் சேகர்பாபு எப்படி அரணாகத் திகழ்கிறாரோ அப்படி இந்த ஆட்சிக்கு நாம் எல்லோரும் அரணாக இருக்க வேண்டும்,” என்று சத்யராஜ் கேட்டுக்கொண்டார்.

