இலங்கைக்குக் கடத்த முயற்சி; ரூ.108 கோடி போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்த முயற்சி; ரூ.108 கோடி போதைப்பொருள் பறிமுதல்

படம்: ஊடகம்

06 Mar 2024 - 6:50 pm

1 mins read

ராமேசுவரம்: கடல் வழியாக இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்திச் செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திச் செல்வதாக சென்னை மண்டல மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனையடுத்து, திங்கட்கிழமையன்று (மார்ச் 4) இந்தியக் கடலோரக் காவல்படையினருடன் இணைந்து வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சுற்றுக்காவல் கப்பலில் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு விரைந்தனர்.

அப்போது, தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த நாட்டுப்படகைச் சோதனையிட்டபோது, அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவற்றைப் பறிமுதல் செய்ததோடு, படகில் இருந்த மூவரையும் அதிகாரிகள் கைதுசெய்தனர்.

படகில் ஐந்து சாக்குப்பைகளில் 111 பொட்டலங்களில் 99 கிலோ ‘ஹஷிஷ்’ போதைப்பொருள் இருந்தது என்றும் அவற்றின் மதிப்பு ரூ.108 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

அந்தப் போதைப்பொருளை பாம்பனில் இருந்து காரில் ஏற்றிக் கொண்டு வந்த ஒருவர், கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்கடத்தல்தமிழ்நாடுஇலங்கை