தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு; மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு; மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

1 mins read
08c37c8a-9611-4362-beda-374ce95bb3f7
தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெங்களூரு மக்கள். - படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர் பெரும் அவதிகளுக்கு ஆளாகி உள்ளனர்.

இதையடுத்து தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அவற்றை மீறுவோர்க்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க குடியிருப்போர் சங்கங்கள் முடிவு செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வழக்கமாக கோடைக் காலத்தில்தான் குடிநீர் தட்டுப்பாடு உச்சத்தை எட்டும். ஆனால் நடப்பாண்டில் மார்ச் மாதத் தொடக்கத்திலேயே கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள்தான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் தண்ணீரை ஆக சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அரசுத்தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று இதுகுறித்து விவரிப்பதுடன், சுமார் 30% அளவுக்கு தண்ணீர் விநியோகத்தைக் குறைக்கவும் உத்தரவிடுகின்றனர்.

சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தண்ணீர் பயன்பாட்டைக் கண்காணிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் இனி தண்ணீரை வீணாக்குவோருக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்