வீடு இல்லை வேதனைப்பட்ட சின்னப்பிள்ளைக்கு வீடு கட்டித் தரும் தமிழக அரசு

வீடு இல்லை வேதனைப்பட்ட சின்னப்பிள்ளைக்கு வீடு கட்டித் தரும் தமிழக அரசு

2 mins read
608013a9-fb4b-455d-941d-452436977cef
சின்னப்பிள்ளை. - படம்: ஊடகம்

சென்னை: பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி சின்னப்பிள்ளைக்கு தமிழக அரசு புதுவீடு கட்டித்தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த வீடு கட்டித்தரப்படும் என்றும் அதற்கான கட்டுமானப்பணிகள் இந்த மாதத்திலேயே தொடங்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்திலுள்ள சில்லுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை. விவசாயக் கூலியாக வேலை பார்த்தவர்.

இவர் அப்பகுதியில் உள்ள பெண்களை விவசாய வேலைகளுக்காக அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய கூலியை நில உரிமையாளர்களிடம் இருந்து மொத்தமாகப் பெற்று பிரித்துத்தரும் குழுவின் தலைவியாக செயல்பட்டார்.

இவரது செயல்பாடுகளால் பல்வேறு சமூகக் கொடுமைகளில் இருந்து மக்கள் விடுவிக்கப்பட்டனர் என்று தினமணி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ஒரு விழாவில் கலந்து கொண்டபோது சின்னப்பிள்ளையைக் கண்டதும் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவரது காலில் விழுந்து வணங்கினார். அதன் பிறகு நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கையும் செயல்பாடுகளும் வெகுவாக அதிகரித்தன.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு அவ்வையார் விருது வழங்கி சிறப்பித்தது.

பின்னர் 2019ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் அளித்தது. அப்போது சின்னப்பிள்ளைக்கு பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் இதுவரை வீடு வழங்கப்படவில்லை. இத்தகவலை அண்மைய பேட்டி ஒன்றில் வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார் சின்னப்பிள்ளை.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு தமிழக அரசு வீடுகட்டித்தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்