வாக்குக்குப் பணம் கொடுப்பதாக புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை: சத்யபிரதா சாஹு

வாக்குக்குப் பணம் கொடுப்பதாக புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை: சத்யபிரதா சாஹு

2 mins read
5cb96c55-38f6-43ca-a58f-f6a5a73aee21
சத்யபிரதா சாஹு. - படம்: ஊடகம்

கோயம்புத்தூர்: வாக்களிப்பதற்கு பணம் கொடுப்பது பற்றி யாரேனும் புகார் தெரிவித்தால் அது குறித்து அடுத்த 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு மின்னிலக்க முறையில் எந்த வகையில் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டாலும், அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த உரியநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

கோயம்புத்தூர், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சத்யபிரதா சாஹு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்காளர்களுக்குப் பணம், டோக்கன், பரிசுப் பொருள்கள் வழங்குவது குறித்து ‘சி-விஜில்’ கைப்பேசி செயலியில் புகைப்படம் அல்லது காணொளியாகப் பதிவு செய்து பொதுமக்கள் அனுப்பிவைத்தால் அடுத்த 100 நிமிடங்களுக்குள் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

“வருமானத்துறை, வணிக வரித்துறை, காவல்துறை, சுங்க வரித்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளையும் இணைத்து நடவடிக்கை எடுக்க இஎஸ்எம்எஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

“கடந்த தேர்தல்களில் வந்த புகார்கள் குறித்து விசாரித்து, நீதிமன்றம் மூலமாக தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

“வேட்பாளர்கள் செய்யும் செலவு குறித்து கண்காணிப்பதற்காக செலவின கணக்குக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் அறிக்கை கொடுப்பார்கள்.

“மக்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

“முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்