சென்னை: இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஜாஃபர் சாதிக் கைதாகியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த அவரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
இதையடுத்து அவர் டெல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் அதன் பின்னர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக டெல்லி காவல்துறையின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் ரகசியத் தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக காவல்துறை, புலனாய்வு அமைப்புகளின் கூட்டுப்படையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்பட இருந்தது. இது தொடர்பாக காவல்துறைக்கு மீண்டும் ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து டெல்லியில் உள்ள கிடங்கு ஒன்றில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ போதைப்பொருள் சிக்கியது. அங்கிருந்த மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்படுபவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் என்பது தெரிய வந்தது.
இவருக்கு திரைஉலகம், அரசியல் உயர் மட்டத்தில் பலருடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவருடன் தொடர்பில் உள்ள போதைப் பொருள் கும்பல் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 45 முறை போதைப்பொருள்களை வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றின் மதிப்பு 2,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜாஃபர் சாதிக் திமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டதை அடுத்து போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது. திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக அவர் செயல்பட்டு வருவதும், தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராக வலம் வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் திமுகவில் இருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அரசியல் தொடர்புகள் கைவிட்ட நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அவரது வீட்டின் கதவில் அழைப்பாணையை ஒட்டிச் சென்றனர்.
ஆனால் ஜாஃபர் சாதிக் தனது குடும்பத்தாருடன் தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் மூலம் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அரசியல், திரை உலகப் பிரமுகர்கள், பல பிரபலங்களுடன் ஜாஃபர் சாதிக் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து அந்தப் பிரபலங்களிடமும் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.