தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் தொல்லை வழக்கில் தண்டனை: காவல்துறை சிறப்பு டிஜிபி தலைமறைவு

2 mins read
2c58a030-00cf-4343-a51d-996ee34be876
ராஜேஷ் தாஸ். - படம்: ஊடகம்

சென்னை: காவல்துறை பெண் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ். இந்நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் சிறப்பு டிஜிபியாக பொறுப்பில் இருந்தார் ராஜேஷ் தாஸ். அப்போது பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவருக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாகவும் அதுகுறித்து பாதிக்கப்பட்டவர் புகார் அளிப்பதை தடுத்ததாகவும் புகார் எழுந்தது.

டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு உதவி செய்ததாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று அதன் முடிவில் ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

அவருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

தீர்ப்பையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் ராஜேஷ்தாஸ். எனினும் அவரது மனு தள்ளுபடியானது.

ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.

இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி தலைமறைவாகி விட்டார். காவல் துறையினர் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்