கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள குணா குகையைக் காண ஏராளமான சுற்றுப்பயணிகள் ஆர்வம் காட்டுவதால், இதற்கான வருமானமும் அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் கொடைக்கானலில் உள்ள இதர சுற்றுலாத் தலங்களை விட குணா குகையைக் காண அதிகமானோர் வருகை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
மலையாளத் திரையுலகில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி, தமிழகத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் ஒரு முறையாவது கொடைக்கானலில் உள்ள குணா குகையைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வத்துக்கு ஆளாகின்றனர்.
இதனால், இந்த மார்ச் மாதம் முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வனத்துறை சோதனைச் சாவடிக்குள் வாகனம் நுழையும்போதே குணா குகை எங்குள்ளது என்று கேட்டபடியே உள்ளே வருகின்றனர்.
“குணா குகை பகுதிக்குச் செல்ல ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டிக்கெட்டின் அடிப்படையில் மார்ச் 1 முதல் 10ஆம் தேதி வரை 46 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை அளித்துள்ளனர். இதன்மூலம் ரூ.4.60 லட்சம் வசூலாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

