சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக கூட்டணியில் பாமகவும் தேமுதிகவும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோல் கட்சிகள் இடம் மாறுவதன் காரணமாக தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வலுவடைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவிற்கு அதிர்ச்சியூட்டும் கணக்கு ஒன்றை பாஜக தன் கைவசம் வைத்துள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகளைப் பாஜகவின் தலைவர்கள் முடுக்கி விட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து, தொகுதிப் பங்கீடு விவரம் அண்மையில் வெளியானது.
இந்நிலையில், சீக்கிரம் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்து, 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளதாம்.
இதனிடையே, பாமக, தேமுதிக ஆகிய இவ்விரண்டு கட்சிகளும் அதிமுக கூட்டணிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பாஜக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொள்ளும் முடிவை தேமுதிக எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், பாமக உடனும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமகவை இழுக்க பாஜகவும் அதிமுகவும் வலையை விரித்துள்ள நிலையில், எந்த வலையில் பாமக சிக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது.
இந்நிலையில்தான் அன்புமணி ராமதாசுடனும் பிரேமலதா உடனும் பேச்சுவார்த்தை நடத்த விகே சிங், கிஷன் ரெட்டி ஆகிய இரண்டு மத்திய அமைச்சர்களை அமித் ஷா தமிழ்நாட்டிற்கு திங்கள் கிழமை அனுப்பி வைத்துள்ளாராம்.
தொடர்புடைய செய்திகள்
இரு கட்சிகளையும் அதிமுக கூட்டணிக்கு செல்லவிடாமல் பாஜக கூட்டணிக்கு அழைப்பதே இவர்களின் நோக்கம் என்கிறார்கள்.
பாமகவுக்கு 8 சீட், தேமுதிகவிற்கு 4 சீட் என்று கொடுக்கவும் பாஜக திட்டமிட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறதாம்.
இதனால் அதிமுக தனித்துவிடப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம். முக்கியமாக பாமக, தேமுதிக இல்லை என்றால் அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி எதுவும் இருக்காது. முக்கியமாக புதிய தமிழகம் கூட பாஜக கூட்டணிக்கு போகும் சூழலில் உள்ளது. இது அதிமுகவிற்கு சிக்கலாக மாறி உள்ளது.