செங்கல்பட்டு: பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
மதுராந்தகம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அம்மாணவர்களில் சிலர் பேருந்தில் கல்லூரிக்குச் செல்வதும், பேருந்துப் படிக்கட்டுகளில் பயணம் செய்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது.
இத்தகைய பயணம் ஆபத்தானது என தொடர்ந்து அரசும் அதிகாரிகளும் அறிவுறுத்தி வரும் நிலையில், மாணவர்கள் தங்கள் வழக்கத்தை மாற்றியபாடில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று சில மாணவர்கள் தனியார் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணம் செய்துள்ளனர்.
அப்போது அவ்வழியே சென்ற கொள்கலன் லாரி ஒன்று பேருந்தை முந்திச் செல்ல முயன்றது. லாரியும் பேருந்து லேசாக உரசியதில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

