சென்னை: உலகம் முழுதும் உள்ள முருக பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில் ‘உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு’ ஒன்றை வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில் நடத்த தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இரண்டு நாள்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களைச் சேர்ந்த அறங்காவலர்கள் அழைக்கப்படுவர். குறைந்தது 500 வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு இதனை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் முருகனைப் பற்றிய ஆய்வுகளுடன் கருத்தரங்கங்களும் சொற்பொழிவுகளும் இடம்பெறும். மாநாடு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவில் குடமுழுக்கு ரூ.98 கோடி மதிப்பீட்டில் அழகு தமிழால் நடத்தப்பட்டது.
படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அறநிலையத்துறை நிதி ரூ.100 கோடி மற்றும் தனியார் பங்களிப்பு ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது. இதேபோல் திருத்தணி, திருப்பரங்குன்றம் கோவில்களிலும் திருப்பணிகள் நடக்கிறது.
26 ராமர் கோவில்கள் குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. திராவிட மாடல் ஆட்சி மதத்துக்கு எதிரானதல்ல. கடவுளை வழிபட வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கோவில்கள் தூய்மையாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

