‘வாட்ஸ்அப்’ பல்கலைக்கழகம் நடத்தும் பாஜக: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

‘வாட்ஸ்அப்’ பல்கலைக்கழகம் நடத்தும் பாஜக: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

2 mins read
ece79d20-29cf-4c6a-81e4-ab421eac1191
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

பொள்ளாச்சி: எந்தத் தேர்தல் வந்தாலும் திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொய்யும், ‘வாட்ஸ் அப்’ கதைகளும்தான் பாஜகவின் உயிர் மூச்சு என பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதால்தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் பெருகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி யைக் கண்டு சிலருக்கு பொறாமை என்றார்.

எதிர்க்கட்சியினர் பொய்களையும் அவதூறுகளையும் பரப்ப ‘வாட்ஸ் அப்’ பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

“அவதூறு பரப்புபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய சரியான காலம் வந்துவிட்டது.

மக்களை ஏமாற்ற, அதிமுகவும் பாஜகவும் பிரிந்ததுபோல் நடிக்கிறார்கள். இவர்களின் கள்ளக்கூட்டணிக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாக்க திமுக கூட்டணி உள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின்.

“முன்பு வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா? அதிமுக ஆட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த அமைச்சர்கள், மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன?,” என்று முதல்வர் கேள்விகளை அடுக்கினார்.

“பெற்றோரைப் பதைபதைக்க வைத்த பொள்ளாச்சி பாலியல் கொடுமைதான் அதிமுக ஆட்சியில் நடந்தது. அங்கு பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்கமுடியுமா?

“கஞ்சா, குட்கா, மாமுல் பட்டியலில் அமைச்சரும் டிஜிபியும் இருந்தது யார் ஆட்சியில்?

“தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக. கோடநாடு பங்களாவில் கொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரங்கள்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டு மக்களையும் தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் தமிழ் மண்ணை, தமிழை, தமிழ்நாட்டை, தமிழ் பண்பாட்டைபழிப்பவர்களுக்குப் பாடம் புகட்டும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்