நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை செய்ய வெள்ளிக்கிழமை (15-3-24) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தென் மாவட்ட பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அங்கு பிரசாரம் செய்கிறார். மோடி வருகையை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிரதமர் மோடி பேச உள்ள நிகழ்ச்சிக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணிச் செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன் உள்பட பாஜக தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

