தந்தை அதிமுக, மகன் பாஜக

தந்தை அதிமுக, மகன் பாஜக

1 mins read
d9061596-80d8-4f4b-8164-49bb602df64b
அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி நடத்தி வருவதால் பாமக யாருடன் கூட்டணி என்ற இழுபறி நீடித்து வருகிறது.  - படம்: இணையம்

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாகக் கூறப்படுகிறது.

அன்புமணியிடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பாஜக குழுவினர் மத்திய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுடன் அதிமுக கொடுப்பதைவிடக் கூடுதல் தொகுதிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை அன்புமணி தனியாகச் சந்தித்து கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசியதாகவும், பாஜக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2004 - 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணிக்கு, மீண்டும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காததால், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில், அன்புமணியின் இந்த முடிவு ராமதாஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை எந்தக் கட்சி ஈர்க்கும் என்பதும் இதில் வெற்றிபெறப் போவது தந்தையா, மகனா என்பதும் விரைவில் தெரிந்துவிடும்.

குறிப்புச் சொற்கள்