மோடி வருகை: கன்னியாகுமரியில் 2,000 காவலர்கள் குவிப்பு; மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை; சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மோடி வருகை: கன்னியாகுமரியில் 2,000 காவலர்கள் குவிப்பு; மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை; சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

2 mins read
ed1c08e2-88e3-4877-bf3f-51ca52fe84f1
கன்னியாகுமரி, சின்னமுட்டம் உள்ளிட்ட ஏழு கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து கடற்கரையோரம் ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. - படம்: ஊடகம்

கன்னியாகுமரி: தமிழ் மக்களுடன் தமிழில் பேசாதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், இனி ‘நமோ’ செயலி மூலம் தாம் பேசும் உரைகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்றார்.

அந்த வகையில் தாம் தமிழில் பேசப் போவதாகவும் தமிழ் மக்கள் அதைக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வரும் நாடாளுமன்றத்தில் காங்கிரசும் திமுகவும் முற்றிலும் துடைத்தொழிக்கப்படும் என்றும் நாட்டைக் கொள்ளையடிப்பதையே அவ்விரு கட்சிகளும் இலக்காகக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் மோடி வருகையை அடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கன்னியாகுமரியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பாதுகாப்புக் கருதி கன்னியாகுமரி கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு மத்திய கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2,000 மீன்பிடிப் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மீன்பிடிக்கத் தடை விதித்தது குறித்து இணையவாசிகள் சமூக ஊடகங்களில் விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், மோடியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் முடியும் வரை கன்னியாகுமரி கடற்கரை, காந்தி மண்டபம், சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரித் திடல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கருவிகள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன.

எந்தவித டிரோன்கள் பறக்கவும் அனுமதி இல்லை. கன்னியாகுமரிக் கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த வட்டாரமே வெறிச்சோடிக் கிடப்பதாக ஊடகச் செய்தி தெரிவித்தது.

பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார். அதன் தொடர்ச்சியாக இப்போது கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்