கோயில் நிதிக்குக்கூட வரி வசூலிக்கிறது பாஜக அரசு: பூசாரிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு

கோயில் நிதிக்குக்கூட வரி வசூலிக்கிறது பாஜக அரசு: பூசாரிகள் நலச்சங்கம் குற்றச்சாட்டு

1 mins read
fa0f81c3-21e5-4efd-86ed-7fb954c78a8f
சேலத்தில் நடந்த கோயில் பூசாரிகள் நலச்சங்கம் மாநாட்டிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் அந்தச் சங்கத்தின் தலைவர் வாசு. - படம்: ஊடகம்

சேலம்: தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 2,500 கோயில்களுக்கு திருப்பணி நிதியாக ஆண்டுக்கு தலா ரூ.200,000 நிதியளித்து வருகிறது.

அந்த நிதிக்கு மத்திய அரசு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்துகொள்கிறது. கிடைக்கும் இருநூறாயிரத்தில் ரூ.39 ஆயிரத்தை மத்திய அரசு ஜிஎஸ்டி என்ற பெயரில் பிடித்துக் கொள்கிறது என்று சேலத்தில் நடந்த கோயில் பூசாரிகள் நலச்சங்கம் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் வாசு, “மத்திய அரசு இவ்வாறு வரி பிடித்தம் செய்வதால் தமிழக அரசு திருப்பணி நிதியை ரூ.250,000 ஆக உயர்த்தியுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றார்.

“கோயில் பூசாரிகள் அனைவருக்கும் விலையின்றி ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிளை அரசு வழங்கவேண்டும். கோயில்களில் ஆடிமாதம் கூழ் வார்க்க அரிசி, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

“நாடாளுமன்றத் தேர்தலில் 200,000 கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளும் அவர்களுடைய குடும்பத்தாரும் என 23 லட்சம் பேரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம்,” என்று திரு வாசு கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கோயில்