அடையாறு ஆறு சீரமைப்புத் திட்டத்துக்கு ரூ.4,778 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவு

2 mins read
9d873eed-f07c-40ce-901e-4d1dbf6bfefc
அனைத்து மக்களுக்கும் தூய்மையான, பசுமையான சுற்றுச்சூழலை வழங்குவதுதான் நோக்கம் என்கிறார் முதல்வர். - படம்: ஊடகம்

சென்னை: அடையாறு ஆறு சீரமைப்புத் திட்டத்துக்காக ரூ.4,778 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு, தனியார் பங்களிப்பின்கீழ் இந்தச் சீரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான, பசுமையான, நிலையான, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை வழங்குவதுதான் தமிழக அரசின் நோக்கம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

இந்த இலக்கை அடையும் பொருட்டு ஆறுகள், நீர்நிலைகளின் சுற்றுச்சூழலைச் சீரமைக்கத் தேவையான திட்டங்களைத் தயாரித்தல், ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரத்திற்கு உட்பட்ட கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாயுடன் இன்னும் பிற கிளை கால்வாய்கள், முகத்துவாரங்கள், கழிமுகங்களை சீரமைத்தல் ஆகிய பணிகளை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அடையாறு நதியின் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.555.46 கோடி நிர்வாக அனுமதி வழங்கி, முக்கிய பணிகளான கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு அகற்றுதல், நதியின் வெள்ளநீர்க் கொள்ளளவை மேம்படுத்துதல், மறுகுடியமர்வு, மறுவாழ்வுக்கான பணிகள், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரித்தல் மற்றும் நதியின் கரையோர மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை நடைபெற்று வருகின்றன என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இச்சீரமைப்புப் பணிகள் தொடர்புடைய சார்துறைகளால் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சீரமைப்புப் பணிகள் மார்ச் 2024ல் முடிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இச்சீரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில், இதுவரை சார்துறைகளுக்கு ரூ.372.29 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஆற்று படுகையில் முதற்கட்டமாக அடையாறு ஆற்றைப் மீட்டுருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணந்த இத்திட்டத்தினை நிறைவேற்றிட தேவையான 4,778.26 கோடி ரூபாய்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலை வழங்கி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்