சென்னை: தமிழ்த் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குபவர் கவுண்டமணி. இவரது நீண்டகால நிலப்போராட்டத்தை ஒருவழியாக முடித்து வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
வணிக வளாகம் கட்டுவதற்கு நடிகர் கவுண்டமணி கொடுத்த 5 கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தனியார் கட்டுமான நிறுவனத்திற்குத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்து வெள்ளிக்கிழமை (மார்ச் 15) உத்தரவிட்டது.
கடந்த 1996ல் சென்னை கோடம்பாக்கத்தில் நளினி என்பவருக்குச் சொந்தமான 5 கிரவுண்ட் நிலத்தை வாங்கியுள்ளார் கவுண்டமணி.
அதில், 15 மாதத்துக்குள் வணிக வளாகம் ஒன்றைக் கட்டி முடித்து தன்னிடம் ஒப்படைக்கும்படி பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ரூ.3.58 கோடியில் ஒப்பந்தம் போட்டுள்ளார் கவுண்டமணி.
இதைத்தொடர்ந்து, 1999 காலகட்டத்துக்குள் ரூ.1.4 கோடி பணம் கவுண்டமணி தரப்பு ஒப்படைத்துள்ளது.
ஆனால், 2003ஆம் ஆண்டு வரையிலும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாததால் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கவுண்டமணி வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி வழக்கறிஞர் ஒருவரை நியமித்தார்.
கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த வழக்கறிஞர் ரூ.46.51 லட்சத்துக்கு மட்டுமே பணிகள் நடந்திருப்பதாகத் தெரிவித்து, இதுகுறித்து நீதிமன்றத்தில் அறிக்கையும் தாக்கல் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, கட்டுமானப் பணிகள் முழுமையாக முடித்தபின்னர் பணம் தராவிட்டால் அதுகுறித்து கேட்கமுடியும்.
தற்போது செய்து முடித்திருக்கும் பணிகளுடன் ஒப்பிடுகையில் ரூ.63 லட்சம் அதிகமாகவே கட்டுமான நிறுவனத்துக்கு கவுண்டமணி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, 5 கிரவுண்ட் நிலத்தை மீண்டும் கவுண்டமணியிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2008ஆம் ஆண்டு உத்தரவிட்ட தனி நீதிபதி, 2008 ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கட்டுமான நிறுவனம், கடந்த 2021ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், கவுண்டமணியிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

