செங்கல்பட்டு: புழல் சிறையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது இரு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சமயம் சோதனையில் ஈடுபட்ட காவலர்களுக்கு ஐந்து கைதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் காவல்துறை திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். இதன் மூலம் சிறைச்சாலைகளில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும்.
குறிப்பாக கைதிகளுக்குத் தேவைப்படும் சில பொருள்களை பணம் பெற்றுக்கொண்டு சிறைக்காவலர்களே ஏற்பாடு செய்து கொடுப்பது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் வியாழக்கிழமை அன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு சில கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐந்து கைதிகள் வரம்பு மீறி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்ததாகத் தெரிகிறது.
எனினும் இந்த மிரட்டலையும் மீறி இரண்டு கைப்பேசிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மிரட்டல் விடுத்த கைதிகள் மீது வழக்குப் பதிவானது.

