மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனகர்த்தாவிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவெண்காடு சம்பாகட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை பிப்ரவரி 28ஆம் தேதி கைது செய்தனர். பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் க.அகோரம் உள்ளிட்ட 5 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டம், அலிபாக்கில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அகோரத்தை தனிப்படை காவல்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரை மயிலாடுதுறைக்கு அழைத்து வந்து, செம்பனார்கோவில் திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
அவரை மார்ச் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கனிமொழி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மயிலாடுதுறை சிறையில் அடைக்கப்பட்டார்.

