கோயம்புத்தூர்: மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக கோயம்புத்தூருக்கு மார்ச் 18ஆம் தேதி வருகை தருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப் பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார். மாலை 4 மணிக்கு கவுண்டம்பாளையத்தில் தொடங்கும் பேரணி, ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே நிறைவடைகிறது.
இதனையடுத்து எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் ஐந்தடுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000க்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக் குறித்து சிறப்புப் பாதுகாப்புக் குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
கோவையில் முப்படை அலுவலகங்கள், காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் ஏற்கெனவே ட்ரோன்கள் பறக்க தடை உள்ளது. பிரதமர் வருகையையொட்டி, துடியலூர், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் பகுதிகளிலும் ட்ரோன்கள் பறக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
பிரதமரின் வாகனப் பேரணியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் கடந்த இரு நாட்களாக ஏ.ஐ.ஜி.ராவூப் தலைமையில் கோவையில் முகாமிட்டுள்ளனர்.
மேலும், பேரணி நடக்கும் வழித்தடங்கள் முழுவதையும் ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் ரவி உள்ளிட்டோரும் சென்றனர். தொடர்ந்து, சிறப்புப் பாதுகாப்புப் பிரிவினர், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும், வாகன ஒத்திகை நிகழ்ச்சியும் காவல் துறையினரால் நேற்று நடத்தப்பட்டது.

