சீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ்

சீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ்

1 mins read
f0f36081-2d90-43a7-b4b7-c491de8d3035
இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வரும் சீர்மரபினருக்கு இனி ஒரே சான்றிதழ்தான் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றப் பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்புஎன வகைப்படுத்தப்பட்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2008ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி அரசாணை (நிலை) எண்.85இல் தமிழ்நாடு சட்டம் 45/1994-இன் கீழ் அறிக்கை வெளியிடப்பட்டு, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட அரசாணைகளின்படி இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றைப் பெறுவதில் சிரமம் உள்ளதாகவும் அதற்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

அந்த கோரிக்கைகளை அரசு ஆய்வு செய்து, சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்கத் தெளிவுரைகள் வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்