சென்னை: மக்களவைத் தேர்தல் 2024 தேர்தல் அட்டவணையை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் மட்டும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
இதனிடையே தேர்தல் தேதிகளை முடிவு செய்வதில் இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளதாக தமிழகத்தின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
“தமிழகத்திற்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி குறுகிய காலத்தில் ஐந்து முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். மற்ற மாநிலங்களுக்கு அவர் ஏன் செல்லவில்லை? தேர்தல் தேதியை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டதா? அல்லது பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சொல்லி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா என்னும் சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது,” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒரே கட்ட வாக்குப்பதிவு என்பது ஏதோ அரசியல் உள்ளீடு இருப்பதை அறிய முடிகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் தமிழ்நாட்டில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது மகாராஷ்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் 3 முதல் 7 கட்டம் வரை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே கட்ட வாக்குப்பதிவு என்பது ஏதோ அரசியல் உள்ளீடு இருப்பதை அறிய முடிகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
“முதற்கட்ட வாக்குப்பதிவுக்கும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் 45 நாட்கள் இடைவெளி என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தேர்தல் ஆணையத்தை நம்பி நாங்கள் களமிறங்கவில்லை. மக்களை நம்பியே களமிறங்குகிறோம்,” என்று சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

