தேர்தல் அரசியலில் மறுபிரவேசம்: ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை பதவி விலகல்

2 mins read
a7b15ee4-ec24-4586-9b45-c45dc3f4bab0
தமிழிசை சவுந்தரராஜன் - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளிலிருந்து தமிழிசை சவுந்தரராஜன் விலகியுள்ளார்.

தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தமிழிசை சவுந்தரராஜன் பணியாற்றி வருகிறார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்டார். கனிமொழியிடம் சில லட்சங்கள் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற பின் 2019 செப்டம்பரில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2021 பிப்ரவரியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தமிழிசை கூடுதலாக நியமிக்கப்பட்டார்.

இரு மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றி வந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் தமிழிசை ஆளுநர் பதவியிலிருந்து விலகக்கூடும் என்று ஏற்கெனவே பேச்சுகள் எழுந்தன.

அது பற்றிய கேள்விக்கு தமிழிசை, “ஆளுநர் பதவியிலிருந்து நான் விலக உள்ளேன் என்பது தவறான செய்தி. கட்சி மேலிடம் என்ன உத்தரவிடுகிறதோ அதைத்தான் நான் செய்து வருகிறேன். எப்போதும் மக்களுக்காக நான் இருப்பேன். பிரதமர் மோடி மற்றும் ஸ்ரீ ராமரின் தயவால் நான் எனது மனசாட்சிப்படி பணியாற்றி வருகிறேன். எனவே ஆளுநர் பதவியிலிருந்து விலகுவேன் என்ற பேச்சுக்கே இடமில்லை,” என்று விளக்கமளித்தார்.

இந்தநிலையில்தான் திங்கட்கிழமையன்று (மார்ச் 18) தமிழிசை ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி, நெல்லை அல்லது புதுச்சேரியில் தமிழிசை போட்டியிடலாம் என்று பேசப்படும் நிலையில் அவரது பதவி விலகல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்