தென்காசி: கடையம் அருகே 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் வாழிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு, தங்கம் ஆகியவை கிடைத்துள்ளன.
இந்தப் பகுதியின் மேற்பரப்பில் பழமையான உடைந்த கிண்ணங்கள், நொறுங்கிய பானைகள், உடைந்த நிலையில் கைப்பிடியுடன் கூடிய மூடிகள், வேலைப்பாடு உடைய பானை வகைகள், தாங்கிகள், தட்டுகள், சட்டிகள் சிதறிக் கிடக்கின்றன.
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமத் தாழிகளைக் கொண்ட ஈமக்காட்டை கடந்த வாரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் மாணவி கண்டுபிடித்தார்.
இதையடுத்து அங்கு ஆய்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.
“பானை ஓடுகள் சிவப்பு, கருப்பு மற்றும் கருப்பு சிவப்பு ஆகிய நிறத்தைக் கொண்டவையாக இருந்தன. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் ஏராளமான தொல் பொருள்களைச் சேகரித்துள்ளனர். அவற்றில் மிகச்சிறிய தங்க வளையமும் அடக்கம். மேலும் இவர்கள் தமிழி எழுத்தைத் தாங்கிய பானை ஓடு ஒன்றையும் கண்டுபிடித்தனர்,” என்று தினகரன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் குறிப்பிட்ட இப்பகுதியில் பண்பாட்டிலும் பொருளாதாரத்திலும் செழித்தோங்கிய ஒரு சமூகம் இந்தப் பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் பேராசிரியர்களான முருகன், மதிவாணன் தெரிவித்துள்ளனர்.
ஆய்வை சிறப்பாக மேற்கொண்ட மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

