சென்னை: திமுக கூட்டணியில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே அறிவித்திருந்தபடி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகள் எவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து அத்தொகுதி விவரங்களை தமிழக காங்கிரஸ் வெளியிட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை திருவள்ளூர் (தனித் தொகுதி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய தொகுதிகள் தமிழகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், புதுவை நாடாளுமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் கூட்டணித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் திங்கட்கிழமை கையெழுத்தானது.
திருச்சி தொகுதியில் வைகோவின் மகனான துரை வைகோ போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திமுக இம்முறை களம் இறங்கும் தொகுதிகள் எவை என உறுதியாகத் தெரியவந்துள்ளது. வட சென்னை, தென் சென்னை, மத்தியச் சென்னை, ஸ்ரீபெரும்பதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, தஞ்சை, தூத்துக்குடி, பெரம்பலூர், கோவை, ஈரோடு, தென்காசி, தேனி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சித் தலைமை விரைவில் அறிவிக்க உள்ளது.
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

