சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளம்பரப் பதாகைகள் வைத்ததாக எழுந்த புகாரின் பேரில், பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் ஆகியோர் மீது கோயம்பேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, திங்கட்கிழமை மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சரண்யா விஜய் எனும் எம்ப்ராய்டிங் தையல் பயிற்சி நிபுணர் அளித்த 6 மாத இலவசப் பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சியை நிறைவு செய்த, சுமார் 300 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பயிற்சி பெற்ற பெண்கள் இந்த சான்றிதழை வாங்கி சென்றனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. ஆனால் அதையும் மீறி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

