சென்னை: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியில் இருந்து விலகிய தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் முழுநேர அரசியலுக்குத் திரும்பி இருக்கிறார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் சென்ற தமிழிசையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, எல்.முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் படிவத்தை அவர் பூர்த்தி செய்து கொடுத்தார். அவருக்குக் கட்சியின் உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை, ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்டதும் அக்கட்சியில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “400 பாஜக எம்.பி.க்களில் நானும் ஓர் எம்பியாக இருக்க வேண்டும் என்று இந்த முடிவை எடுத்துள்ளேன். கமலாலயத்தில்தான் எனது மூச்சு உணர்வுபூர்வமாக இருந்துகொண்டு இருக்கிறது,” என்றார்.

