திருச்சி: திருச்சி என்றாலே திருப்பு முனைதான் என்றும் இந்தியாவிற்கு இப்போது நல்ல திருப்பு முனை தேவைப்படுகிறது என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வெள்ளிக்கிழமை அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, திருச்சி என்றாலே திமுக தான் என்றும் திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதையாகவே அமையும் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“நாட்டுக்குத் தேவையான திருப்புமுனையை ஏற்படுத்த திருச்சியில் ஒன்றிணைந்துள்ளோம். திமுகவுக்கு தமிழக மக்கள் ஆறு முறை ஆட்சிப் பொறுப்பை வழங்கி உள்ளனர். இப்போது. இந்தியாவே பாராட்டும் ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம்.
“திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை எனப் பிரதமர் பேசியுள்ளார். தோல்விப் பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை. தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தினால்தான் பிரதமர் தமிழகத்துக்கு வருகிறார்.
“கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு என எந்த ஒரு திட்டத்தையாவது செயல்படுத்தியதாக பிரதமர் மோடியால் சொல்ல இயலுமா என்று கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கான சிறப்புத் திட்டங்கள் எதையாவது பிரதமரால் பட்டியலிட முடியுமா என்றார்.
“பிரதமரின் கண்களிலும் முகத்திலும் தோல்விப் பயம் தெரிகிறது. பிரதமரால் தான் செய்த எந்த சாதனைகளையும் சொல்ல முடியவில்லை.
“ஆனால் எங்களது மூன்று ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை எடுத்துச் சொல்ல ஒருநாள் போதாது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தொடர்புடைய செய்திகள்
பத்து ஆண்டுகால மத்திய பாஜக அரசின் செயல்பாட்டுக்கு தேர்தல் பத்திர ஊழல்தான் சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்ட அவர், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாஜக அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்றார்.