பாடகர் கிருஷ்ணாவுக்கு விருது அளிக்கப்பட்டதில் சர்ச்சை: இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம் என முதல்வர் வேண்டுகோள்

2 mins read
d015eb38-ed40-497f-b882-74926a3b0f71
டி.எம்.கிருஷ்ணா. - படம்: ஊடகம்

சென்னை: பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி விருது வழங்கியது சர்ச்சையாகி உள்ளது.

தந்தை பெரியார் பற்றி அவர் பேசுவது ஆபத்தானது என்றும் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே அவர் ஆதரவு அளிக்கிறார் என்றும் ஒரு தரப்பினர் குறைகூறி உள்ளனர்.

இந்நிலையில், இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம் என இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு 2024ஆம் ஆண்டுக்கான ‘சங்கீதகலாநிதி’ விருது வழங்கப்படும் என மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது. இதற்கு இசைக் கலைஞர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி விளக்கம் அளித்துள்ளார்.

“கிருஷ்ணா இசையில் சிறந்து விளங்கியதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அவரது தேர்வை பாதிக்கவில்லை. கிருஷ்ணாவை விரும்பாத சிலர் அவரைப் பற்றி பேசி இருப்பது மிகவும் தவறு,” என்று என்.முரளி கூறியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாடகர் கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளாலும் எளியோரைப்பற்றி தொடர்ந்து பேசி வருவதாலும் அவரை ஒரு தரப்பினர் காழ்ப்புணர்வுடனும், உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

“முக்கால் நூற்றாண்டுகாலம் அறவழியில், அமைதி வழியில் போராடிய தந்தை பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் அவதூறுச் சேற்றை வீச முற்பட மாட்டார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இதற்கிடையே பாடகர் கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர் என்று இசைக்கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் கூறியுள்ளனர்.

“இசையில் இருக்கும் ஆன்மீக உணர்வை கிருஷ்ணா தொடர்ந்து இழிவுபடுத்தி உள்ளார். பெரியார் போன்ற ஒருவரைப்பற்றி கிருஷ்ணா புகழ்ந்து பேசியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.” என்று இருவரும் கூறியுள்ளனர்.

பின்னணிப் பாடகி சின்மயி கூறுகையில், “கர்நாடக இசைக் கலைஞர்கள் பலர் பாலியல் துன்புறுத்தல், அத்துமீறல்கள் தொடர்பாக குரல் கொடுத்தபோது யாரும் தங்கள் கருத்துகளை வெளியிடவில்லை. இப்போது டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது அறிவிக்கப்பட்டதும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கிருஷ்ணாவுக்கு என் வாழ்த்துக்கள்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்