சென்னை: தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிக தொகையைப் பெற்றிருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், 21 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திமுக, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 1,000 கோடி வரை நிதி பெற்றுள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தேர்தலில் கறுப்பு பணம் புழங்குவதை தவிர்க்கவே, தேர்தல் பத்திர திட்டத்தை பாஜக கொண்டு வந்ததாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“லாட்டரி விற்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து திமுக ரூ.500 கோடி பெற்றுள்ளது. ஆனால், இந்திய அளவில் 450க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பாஜக நிதி பெற்றது பற்றி முதல்வர் திருச்சி கூட்டத்தில் குறை கூறியிருக்கிறார்.
“முறைப்படி வங்கிகள் மூலம் நிதி பெற்றால் அதையும் குறை கூறுகின்றனர்,” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணி தலைவர்களுக்கு தோல்விப் பயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தங்களுக்கு உதவுவது யார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என கூறியுள்ளார்.

