தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்பயிற்சி மேற்கொண்ட பெண்களை மயக்கி, மிரட்டிப் பணம் பறித்த உடற்பயிற்சியாளர் கைது

2 mins read
d124e36e-4a83-4443-b4a6-f29647e13046
மணிகண்டன். - படம்: ஊடகம்

சென்னை: உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்த பெண்களை மயக்கி, மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் உடற்பயிற்சியாளர் ஒருவரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதியான காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சிக்கூடம் நடத்தி வருகிறார் மணிகண்டன். இவர் பல்வேறு ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று ‘மிஸ்டர் வோர்ல்ட்’ உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இவருக்கும் கவிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. எனினும் சந்தியா என்ற பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார் மணிகண்டன். அவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த சந்தியா, தனது உடற்கட்டைக் காட்டி பெண்களை மயக்குவது மணிகண்டனின் வாடிக்கை என்றும் பல பெண்களை இவ்வாறு மிரட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு மனைவி கவிதா மேற்கொண்ட முயற்சியால் பிணையில் வெளிவந்தார் மணிகண்டன்.

பின்னர் மனைவி கவிதாவுடன் வசித்து வந்த நிலையில் அவர் மீண்டும் மோசடி வேலைகளைத் தொடங்கியதாகத் தெரிகிறது.

“என் கணவர் ‘யூடியூப்’ தளத்தில் அளித்த பேட்டி ஒன்றைப் பார்த்தேன். அதில் தன் மனைவி என்று வேறொரு பெண்ணை அவர் அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்தார்,” என்று காவல்துறையிடம் தெரிவித்தார் கவிதா.

மேலும், கணவரும் அவரது குடும்பத்தாரும் கொடுமைப்படுத்தியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்க மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்துக்கொள்முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி கணவர் மீது வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளார் கவிதா.

இது குறித்து காவல்துறை விசாரித்து வரும் நிலையில், மணிகண்டன் பல பெண்களை மிரட்டியது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாகி உள்ள அவரை காவல்துறையினர் தேடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்