தேனி: பாஜக கூட்டணியில் இணைந்துள்ள அமமுக கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
தேனி தொகுதியில் டிடிவி தினகரனும், திருச்சி தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிட உள்ளனர். இதையடுத்து, அவ்விரு தொகுதிகளிலும் அமமுகவினர் தீவிர பிரசார நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.
இம்முறை திமுக கூட்டணி சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் போட்டியிட உள்ளார். முன்பு அமமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வலம் வந்த தங்கதமிழ் செல்வன், தினகரனை தனது சகோதரர் என்றுதான் குறிப்பிடுவார்.
எனினும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிலையில் திமுக சார்பாக தேனி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக வலம் வந்த தங்கதமிழ் செல்வன் இப்போது அவரை எதிர்த்து தேர்தல் களம் காண்கிறார்.