தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவியின் தங்கையை மணமுடித்துத் தரச் சொல்லி வற்புறுத்திய ஆடவர் கைது

1 mins read
7dfbd3be-b355-40b9-bd32-2c9acab9fb40
மாதிரிப்படம்: - பிக்சாபே

சேலம்: காதலித்து மணந்துகொண்ட பெண்ணின் தங்கையையும் மணமுடித்துத் தருமாறு கட்டாயப்படுத்திய ஆடவரைக் காவல்துறை கைதுசெய்து சிறையில் அடைத்தது.

சேலம் மாவட்டம், பெரியசோகை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், 30, ஐந்தாண்டுகளுக்குமுன் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

ஆயினும், எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட நிலையில், முதல் நாலாண்டுகளுக்கு அவர்களது மணவாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக அவர்களது வாழ்க்கையில் புயல் வீசியதாகக் கூறப்படுகிறது.

சுரேஷ்குமார் வரதட்சணை கேட்டு தன் மனைவியைக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இதனிடையே, அவருடைய மனைவியின் 21 வயது தங்கை, தன் அக்காளைப் பார்ப்பதற்கு அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்றுள்ளார். சுரேஷ்குமார் அவரைக் கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனைக் காணொளியாகப் பதிவுசெய்து பலமுறை அவருடன் வல்லுறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், தன் மனைவியின் தங்கையையும் தனக்கே மணமுடித்துத் தருமாறு சுரேஷ்குமார் வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தன் மனைவியையும் அவர் வீட்டைவிட்டுத் துரத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவ்விரு பெண்களும் சுரேஷ்குமார்மீது காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதனையறிந்த சுரேஷ்குமார் தலைமறைவானார்.

ஆயினும், கைப்பேசி எண் மூலம் அவரது இருப்பிடத்தை அறிந்து, காவல்துறை அவரைக் கைதுசெய்தது. அவர்மீதான புகாரையும் காவல்துறை விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்