நீலகிரி: நீலகிரித் தொகுதியில் பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றனர். முதலில் பா.ஜ.கவினர் உதகை காபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வர தாமதமானதால் பா.ஜ.க. ஊர்வலம் தாமதமாக தொடங்கியது.
அதற்குள் அ.தி.மு.கவினர் அங்கு திரண்டனர். இருவரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவலர்கள் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பா.ஜ.கவினரின் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.கவினர் காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.கவினரை ஊர்வலத்தை சீக்கிரம் முடிக்குமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காவல்துறையைக் கண்டித்து முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உதகை எஸ்.பியை பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

