தமிழ் படிக்கத் தெரியாத நாம் தமிழர் வேட்பாளர்

தமிழ் படிக்கத் தெரியாத நாம் தமிழர் வேட்பாளர்

2 mins read
61c18644-c9be-4552-b5c5-40807b313b6b
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு உறுதிமொழிப் படிவத்தை வாசித்துக்காட்டும் ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன். - படம்: ஊடகம்

விருதுநகர்: வேட்புமனு தாக்கல் செய்ய வந்த விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை, உறுதிமொழிப் படிவத்தை வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார் ஆட்சியர். அதைக்கேட்ட வேட்பாளர் “எனக்குத் தமிழ் தெரியாது,” என்று கூறிவிட்டார். அதிர்ச்சியான ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் அந்த உறுதிமொழிப் படிவத்தை வாசிக்க பின் அந்த வேட்பாளர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக், 27. மருத்துவரான இவர், நாம் தமிழர் கட்சி மருத்துவர் பாசறையின் மாவட்டச் செயலாளராக உள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதா என கட்சியினரிடம் கேட்டபோது, மருத்துவர் கவுசிக்கின் பெற்றோர் வடமாநிலத்தில் வசிக்கின்றனர். கவுசிக் அங்கு படித்ததால் அவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது, பேச மட்டுமே தெரியும் என்று கூறினர்.

சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் கவுசிக், தமக்கு தமிழ் படிக்கத் தெரியாது என கூறி தேர்தல் அலுவலரின் உதவியை நாடிய சம்பவம் விவாதப் பொருளாகி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமது சமூக ஊடகப் பக்கத்தில், “விருதுநகர் தொகுதியின், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக், நேற்று மனு தாக்கல் செய்ய வந்தபோது, உறுதிமொழியைப் படிக்கச் சொல்லியுள்ளனர். அவர் தனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று சொல்லி விட்டாராம். நா...ம் தமிழர்! ஆனால் தமிழ் மட்டும் தெரியாது,” என கிண்டலடித்துள்ளார்.

நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். இதில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர். இவர்கள், தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்