ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மரணம்

2 mins read
f281200b-860f-4c71-b39f-b96b79045434
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமக்கு தொகுதி ஒதுக்கப்படாததை அடுத்து, உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் திரு ஏ. கணேசமூர்த்தி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்ததாகக் கூறப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

கோயம்புத்தூர்: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி மார்ச் 28ஆம் தேதி அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 77.

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1978ல் திமுக மாணவரணி பொறுப்பாளர் பதவி வகித்த அவர், 1989ஆம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். 1993ல் திமுக ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆனார்.

அதே ஆண்டில் வைகோவுடன் மதிமுகவில் இணைந்து ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆனார். இதுவரை மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

1998ல் பழனி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 2009 , 2014 , 2019 ஆகிய மூன்று தேர்தல்களிலும் அ.கணேசமூர்த்தி போட்டியிட்டு 2009 , 2019 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், மார்ச் 24ஆம் தேதி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் கணேசமூர்த்தி உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது உண்மையன்று என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கணேசமூர்த்தியின் உடல் வைக்கப்பட்டுள்ள கோவை தனியார் மருத்துவமனைக்குச் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.

“கொள்கையும் லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கனேசமூர்த்தி. ஆனால் சில நாள்களாகவே அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் ஈரோடு மாவட்டக் கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்